Monday, October 25, 2010

உன்னைவிட........

இரவைத் தேடாத நிலா
ஒரு வேளை
நிரந்தரமாய்ப் போனால்...
 
நிசப்தங்களின் மத்தியில்
சப்தமாக மனதில்
இன்னமும் ஒலிக்கும்
உன் கொலுசொலி ஒரு வேளை
ஒலிக்காது போனால்...
 
உன் நினைவு ஏற்படுத்திய
காயங்கள்,
காயங்கள் உண்டாக்கிய
வலிகள்,
வலிகளுக்கு வலி தரவல்ல
என் கவிதைகள்
எனக்கு எழுத வராது போனால்...
 
ஒரு வேளை பெண்ணே
உன்னை நான் மறந்து போகக்கூடும்...
 
உன்னைவிடப் பேரழகியை
தினமும் பார்க்கிறேன்..
 
உன்னைவிட இனியவளை
என்றும் சந்திக்கிறேன்..
 
உன்னைவிடக் குணத்தவர்கள்
பலரைப் பார்த்திருக்கிறேன்...
 
உன்னைவிட எல்லாம்...
உன்னைவிட பலரும்..- ஆனால்
உன்னைப்போல ஒருத்தியும்
இங்கில்லையே...!

Tuesday, June 15, 2010

காதல் வேண்டாம்!



என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

Monday, May 24, 2010

ஏனென்று சொல்லத் தெரியவில்லை

ஏனென்று சொல்லத் தெரியவில்லை
சில முகங்களை
முதன் முறையாய்
பார்க்கும்போது
ஏற்கெனவே பார்த்த உணர்வை.

ஏனென்று சொல்லத் தெரியவில்லை
சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை
முன்பே எதிர்பார்த்திருந்ததை.

ஏனென்று சொல்லத் தெரியவில்லை
கைவிட்டதைப் போல்
உணரும் நேரங்களில்
ஒலிக்கும் தொலைபேசியில்
நட்பின் கரம் நீளுமென்று
மனம் கணித்ததை.

ஏனென்று சொல்லத் தெரியவில்லை
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய்ச் சொல்லும் நபரிடம்
மனம் பறிகொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை!

Thursday, February 25, 2010

நம் காதல்.............


உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!
உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது...!
உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது...!
உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை...!
உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்...!
உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்...!
உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்...!